புற்றாஜெயா, மார்ச்.14-
லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு சொந்தமானவை என்று சந்தேகிக்கப்படும் சொத்துகள் தொடர்பில் நூற்றுக்கணக்கான ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருகிறது.
தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வரும் ஆவணங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி அறிவித்த தனது சொத்து விபரங்கள் தொடர்பான ஆவணங்களும் அடங்கும் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் பிரதான சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டுள்ள 55 வயதுடைய இஸ்மாயில் சப்ரி இன்று இரண்டாவது நாளாக எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகியுள்ளார்.
ஒரு புறம் விசாரணை நடைபெற்று வந்த போதிலும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு ஏற்ப அவரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் ஏக காலத்தில் ஆராயப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவில் ரொக்கப் பணம் கண்டு பிடிக்கப்பட்டதால் அவருக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்களின் விவரங்களை மிகத் துல்லியமமாக ஆராய வேண்டியுள்ளது.
இஸ்மாயில் சப்ரியின் சொத்து விபரங்களை அடிப்படையாக கொண்டே அவரின் வாக்குமூலம் தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.