கோலாலம்பூர், மார்ச்.14-
கடந்த 2016 ஆம் ஆண்டு, சிலாங்கூர், ரவாங்கில் தனது மனைவி மற்றும் ஏழு மாத பெண் குழந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் லோரி ஓட்டுநருக்கு மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று மீண்டும் நிலைநிறுத்தியது.
சாத்வெண்டர் சிங் என்ற அந்த முன்னாள் லோரி ஓட்டுநரின் 39 ஆவது பிறந்த தினமாக இன்று இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டத்தோ ரோட்ஸாரியா புஜாங், டத்தோ அபு பாகார் ஜாயிஸ் மற்றும் டத்தோ அப்துல் காரிம் அப்துல் ஜாலில் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு, உயர் நீதிமன்றத்தின் தொடக்க தண்டனையை உறுதி செய்தது.
சத்வேண்டர் சிங் குற்றவாளி என்பதைச் சுட்டிக் காட்டும் தெளிவான மற்றும் மறுக்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்கள் அவரின் தண்டனையை உறுதிச் செய்ய வேண்டியதாயிற்று என்று நீதிபதிகள் குழு தனது தீர்ப்பில் தெரிவித்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் தாமான் ரவாங் பெர்டான 2, ரவாங், என்ற முகவரியில் உள்ள தனது வீட்டில் தனது 34 வயது மனைவி டி. கமல்ஜிட் கவுர் மற்றும் தனது 7 மாத பெண் குழந்தையான இஷிலின் கவுர் சந்து ஆகிய இருவரை படுக்கையறையில் தலையணையால் மூச்சடைக்கச் செய்து, மிகக் கொடூரமாகக் கொன்றதாக சத்வேண்டர் சிங் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டு, தனது மனைவியையும், குழந்தையும் யாரோ கொன்று விட்டதாக நாடகமாடிய அந்த லோரி ஓட்டுநர், அவர்தான் இரட்டைக் கொலையை செய்துள்ளார் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த நபருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தது.