கோலாலம்பூர், மார்ச்.14-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வனவிலங்கு கடத்தல் மற்றும் இதர கடத்தல் சம்பவங்களைத் தடுக்க பயணப் பெட்டிகளின் உள்ளடக்கத்தைக் கண்டறியும் ஸ்கேனர்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
பயணப் பெட்டிகளைச் சோதனையிடும் ஸ்கேனர்கள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வழிநடத்தி வரும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிடம் தாம் ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பதாக அந்தோணி லோக் நினைவு கூர்ந்தார்.
ஸ்கேனர்களின் துல்லியமான சோதனையை மீறி, வனவிலங்குகள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறித்து அமைச்சர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இத்தகைய கடத்தல் சம்பவங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று அமைச்சர் அந்தோணி லோக் நினைவுறுத்தினார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று கே.எல். செண்ரலில் Sentuhan Madani Kiosk தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குப் பயணமான இரண்டு பயணிகள், சென்னை, அண்ணா அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பல வகையான விலங்குகளுடன் பிடிப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.