சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்திற்கானக் கட்டமானத் திட்டம் : பிரதமரின் அரசியல் செயலாளருடன் டத்தோஸ்ரீ சுந்தராஜு விவாதிப்பு

ஜார்ஜ்டவுன், மார்ச்.15-

பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத் திட்டம் தொடர்பாக பிரதமரின் அரசியல் செயலாளர் சான் மிங் காயை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு நேரில் சென்று சந்தித்து விவாதித்துள்ளார்.

நேற்று புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் சான் மிங் கையைச் சந்தித்த டத்தோஸ்ரீ சுந்தராஜு, நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் இத்திட்டத்திற்கு, மத்திய அரசாங்கத்தின் உடனடி கவனிப்பு மற்றும் தலையீடு தேவை என்பதை டத்தோஸ்ரீ சுந்தராஜு வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் என்ற முறையில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுவதற்கான திட்டத்தைத் தொடர்வதற்கு கல்வி அமைச்சு அளித்துள்ள உறுதிப்பாட்டிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

எனினும் அந்த உறுதிப்பாடு நிறைவேற்றப்படுவதற்கு, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை மக்கள் நேரில் காண வேண்டும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு வலியுறுத்தினார்.

இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு நடவடிக்கைக் குழு வாயிலாக தம்முடைய முழு ஒத்துழைப்பை மத்திய அரசாங்கத்திற்கு குறிப்பாக பிரதமரின் அலுவலகத்திற்கு வழங்குவதற்குத் தாம் கடப்பாட்டைக் கொண்டு இருப்பதாக சான் மிங் காயிடம் சுந்தராஜு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் கூட்டரசு அரசாங்கத்தின் நேரடி பார்வையில் இருக்கும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட மேம்பாட்டுத் திட்டத்திற்கு, அவர்கள் முழு ஆதரவை வழங்க உறுதி பூண்டு இருப்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

அதே வேளையில் பினாங்கு மாநில அரசுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பின் மூலம் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத் திட்டம், துரிதப்படுத்தப்படும் என்பதுடன் விரைவில் அதன் வெற்றியைக் காண முடியும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS