தெலுக் இந்தான், மார்ச்.15-
தெலுக் இந்தான், பத்து 8, ஜாலான் சங்காட் ஜொங் என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த ஒரு விபத்தினால் கலவரம் வெடித்தது. இதில் 13 நேபாளியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
பிரதான சாலையில் நடந்து சென்ற நேபாளிய பிரஜை ஒருவர், வாகனத்தினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமுற்றார். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்ததாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பக்ரி சைனால் அபிடின் தெரிவித்தார்.
நேபாளிய ஆடவரை மோதித் தள்ளிய வாகனம், நிற்காமல் சென்று விட்டதால் ஆத்திரமுற்ற நேபாளியப் பிரஜைகள் சுமார் ஆயிரம் பேர் திரண்டனர். தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு, வாகனங்கள் செல்ல வழிவிடாமல் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அவர்களின் சாலை மறியல் போராட்டம், சுமார் ஐந்து மணி நேரம் வரை நீடித்தது.
இன்று அதிகாலை 2 மணி வரை நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தைத் தடுக்க போலீசார் களம் இறக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு மேல் அந்த நோபாளியப் பிரஜைகள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்று ஏசிபி பக்ரி குறிப்பிட்டார்.
இந்த கலவரத்தைத் தூண்டிவிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் என நம்பப்படும் 13 நேபாளிய ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து குற்றவியல் சட்டம் 147 ஆவது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.