கோலாலம்பூர், மார்ச்.15-
சிலாங்கூர், சிப்பாங், டேசா விஸ்தாவில் நேற்று அதிகாலையில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியின் போது மூன்று கொள்ளையர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பச்ச சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் எஞ்சிய இரண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவ்விரு கொள்ளையர்களையும் விரைவில் கைது செய்வதற்காக போலீஸ் வளங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமான் கார் தெரிவித்தார்.
அந்த மூன்று கொள்ளையர்களும் தங்கள் வீட்டில் நுழைந்து விட்டனர் என்பதை ரகசிய கேமராவில் கண்டறிந்த வீட்டின் உரிமையாளர், போலீசாருடன் தொடர்பு கொண்டதன் விளைவாக அந்த கொள்ளையர்களைச் சுற்றி வளைப்பதில் போலீசார் அதிரடியாகச் செயல்பட்டனர். இச்சம்பவத்தின் போது இரு கொள்ளையர்கள் தப்பித்து விட்டதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கொள்ளைக் கும்பல் இதுவரையில் ஆயுதமேந்திய 17 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை துணை இயக்குநர் பாஃடில் மர்சுஸ் நேற்று தெரிவித்து இருந்தார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மூன்று மாநிலங்களை இலக்காகக் கொண்டு இக்கும்பல் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.