டிஏபி யாருக்கும் ஆமாம் சாமி போடும் தலையாட்டி கட்சி அல்ல! – லிம் குவான் எங் திட்டவட்டம்!

ஷா ஆலாம், மார்ச்.16-

டிஏபி கட்சி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தாலும் எந்த தரப்பினருக்கும் ‘ஆமாம் சாமி’ எனத் தலையாட்டும் கட்சியாக இருக்காது என்று அதன் தேசியத் தலைவர் லிம் குவான் எங் திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சியின் விசுவாசம் வாக்காளர்களுக்கும் நாட்டிற்கும் மட்டுமே இருக்கும் என்று அவர் கூறினார். பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு கட்சியின் தொடர்ச்சியான விசுவாசத்தையும் டிஏபி தலைவரான அவர் மீண்டும் வலியுறுத்தினார். டிஏபி-யின் மூத்தத் தலைவரான லிம் கிட் சியாங்கின் தலைமையிலிருந்து அந்தோணி லோக்கின் தலைமையின் கீழ் இன்று வரை இந்த நிலைப்பாடு மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“அன்வாரை பிரதமராக்க உதவியதில் தாங்கள் பெருமைப்படுவதாவும், தொடர்ந்து அவருக்கு ஆதரவளிப்பதாகவும் இன்று ஷா ஆலாம் IDCC மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 18வது டிஏபி தேசிய நிலை மாநாட்டில் லிம் உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம், பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ சைபுஃடின் நசுத்தியோன், துணைச் செயலாளர், டாக்டர் சத்திய பிரகாஷ், அமானா கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி முகமட் சாபு, துணைத் தலைவர் ஹாஜி அட்லி பின் ஸாஹாரி, பொதுச் செயலாளர் முகமட் பாஃயிஸ் பின் பாஃட்சில், UPKO கட்சியின் தலைவர் டத்தோ ஏவோன் பெனடிக், பொதுச் செயலாளர் செனட்டர் டத்தோ நெல்சன் அகாங், அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ சுகி மீ ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

15வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக டிஏபி ஆனது, ஒற்றுமை அரசாங்கமானது PH, BN, GPS, GRS ஆகியக் கட்சிகளுடன் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது, எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அரசியல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதற்காக அன்வாரின் நிர்வாகத்தைப் பாராட்டிய லிம், நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களின் நம்பிக்கையை மதிக்க விரைவான பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கட்டணக் கொள்கைகள் போன்றவை மலேசியாவின் பொருளாதாரத்தை, குறிப்பாக சிறு, நடுத்தர வியாபாரங்களை எதிர்மறையாக பாதிக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

WATCH OUR LATEST NEWS