ஷா ஆலாம், மார்ச்.16-
பிரதமர் அன்வார் இப்ராஹிம், கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்துவதற்கான டிஏபி கட்சியின் முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது இரண்டு தவணைகளுக்கு கட்டுப்படுத்துமாறு டிஏபி கட்சி முன்மொழிந்திருந்தது. பிகேஆர் கட்சியும் நம்பிக்கைக் கூட்டணியும் இத்தகைய முன்மொழிவை ஆதரிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக பிற கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியத்தை அன்வார் வலியுறுத்தினார்.
இந்த முன்மொழிவைத் தாம் ஏற்றுக் கொள்வதாகக் கூறிய அவர் ஒருமித்தக் கருத்தை அடைய நாம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து ஆதரவைப் பெற வேண்டும் என்றார். தாம் 10 ஆண்டுகள் கூட பதவியில் நீடிக்க மாட்டார் என்ற அன்வார், இரண்டு ஆண்டுகளிலேயே அவர் சோர்வாகிவிட்டதாக இன்று, ஷா ஆலாம் IDCC மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 18வது டிஏபி தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் பிகேஆர் தலைவரான அன்வார் கூறினார். தேவையான வாக்குகளைப் பெறாமல் இத்தகைய திருத்தங்கள் அவசரமாக செய்யப்படக்கூடாது என்று அவர் நினைவுபடுத்தினார். போதுமான ஆதரவு இல்லாமல் முன்வைக்கப்படும் மசோதா வீணாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
பிரதமர் பதவியை இரண்டு தவணைகளுக்குக் கட்டுப்படுத்துவது உட்பட கூட்டரசு அரசியலமைப்பை அரசாங்கம் திருத்த வேண்டும் என்று கட்சி விரும்புவதாக டிஏபி கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தனது உரையில், கூறினார். நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இஃது உறுதியளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். சட்டத்துறைத் தலைவர், அரசு வழக்கறிஞரின் பொறுப்புகளைப் பிரிப்பது போன்ற நம்பிக்கைக் கூட்டணி உறுதியளித்த மற்றொரு பெரிய சீர்திருத்தத்திற்கு அந்தோணி லோக் மீண்டும் அழைப்பு விடுத்தார்.