புத்ராஜெயா, மார்ச்.17-
லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று திங்கட்கிழமை, நான்காவது நாளாக விசாரணையில் ஆஜராகினார்.
ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப்பணம், தங்கக்கட்டிகள் மற்றும் இதர விலை உயர்ந்தப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு இஸ்மாயில் சப்ரி ஆளாகியுள்ளார்.
இஸ்மாயில் சப்ரியின் வாகனம் காலை 9.52 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகக் கட்டடத்தின் நுழைவாயிலைக் கடந்துச் சென்றது. குழுமியிருந்த செய்தியாளர்களை நோக்கி இஸ்மாயில் சப்ரி கையசைத்தார்.
மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு நாளும், கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரு தினங்களிலும் நடைபெற்ற எஸ்பிஆர்எம் விசாரணையில் இஸ்மாயில் சப்ரி, 15 மணி நேரத்திற்கும் அதிகமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.