பல்கலைக்கழக மாணவிக்குக் கத்திக் குத்து

கோல மூடா, மார்ச்.17-

கெடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனக்கு நன்கு அறிமுகமான இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது. 19 வயதுடைய அந்த மாணவி, தனது தோழிகளுடன் பல்லைக்கழகத்தின் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாணவி, சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல முறை கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் அந்த இளைஞரின் பிடியில் சிக்கிக் கொண்டு அந்த மாணவி போராடிய போது, அந்த இளைஞரும் காயத்திற்கு ஆளானார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கிளினிக்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

சம்பந்தப்பட்ட இளைஞர், அந்த மாணவியின் முன்னாள் காதலன் என்று நம்பப்படுகிறது. தன்னுடனான உறவை அந்த மாணவி முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சம்பந்தப்பட்ட மாணவியைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.

பல்கலைக்கழக கிளினிக்கில் அந்த இளைஞர், சிகிச்சைப் பெற்ற போது, அவரை போலீசார் கைது செய்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS