முன்னாள் பிரதமரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை

புத்ராஜெயா, மார்ச்.17-

வீடொன்றில் 177 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் இதர விலை உயர்ந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் இன்று நான்காவது நாளாக சுமார் 7 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது.

காலை 9.50 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குள் நுழைந்த இஸ்மாயில் சப்ரி, மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.

இஸ்மாயில் சப்ரியிடம் மேலும் சில விவரங்கள் கோரப்படுவதால், நாளை செவ்வாய்க்கிழமை அவர் மீண்டும் எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள தனது நான்கு முன்னாள் அதிகாரிகளின் ஒருவரின் வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 17 கிலோ எடை கொண்ட 70 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த பணம் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்து இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS