டிஏபி கட்சித் தேர்தல் – கோபிந்த் சிங் டியோ அபார வெற்றி! CEC பட்டியலில் திரேசா கோக், வி. சிவகுமார், ஆர்எஸ்என் ராயர் இடம் பெறத் தவறினார்கள்!

ஷா ஆலாம், மார்ச்.17-

டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ 2,785 வாக்குகளைப் பெற்று டிஏபி மத்திய செயற்குழு – C E C வாக்குப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். அதே சமயம், லிம் குவான் எங், C E C யின் 30 உறுப்பினர்களில் ஒருவராகத் தொடர்ந்து தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். டிஏபி தேசியத் தலைவர் பதவி வகித்து வந்த லிம் குவான் எங் 1,719 வாக்குகளைப் பெற்று 26வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கவும், தற்போது வகிக்கும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. பினாங்கு, சிலாங்கூர், பேராக் ஆகிய மாநிலங்களில் குவான் எங்கின் செல்வாக்கு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்த முடிவு மறுக்கிறது.

வாக்குக் கணக்கெடுப்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த பிறகு, டிஏபி சிஇசி தேர்தல் மேலாளர் டெஸ்மண்ட் தான் இன்று இங்கு சிஇசி முழு முடிவையும் அறிவித்தார்.

அதே சமயம், சரவாக் டிஏபி தலைவர் சொங் சியேங் ஜென் 2,631 வாக்குகள் பெற்று இரண்டாவது அதிக வாக்குகளையும், தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் 2,585 வாக்குகள் பெற்று மூன்றாவது அதிக வாக்குகளையும் பெற்றனர். சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் சூ லிம் 2,563 வாக்குகளையும், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் 2,508 வாக்குகளையும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யியோ பீ யின் 2,503 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதனிடையே, செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், மத்திய செயற்குழுவின் 30 உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெறத் தவறினார். பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஏபி துணை பொதுச் செயலாளருமான வி. சிவகுமாரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரும் நிதியமைச்சின் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் ஆகியோர் அப்பட்டியலில் இடம் பெறவில்லை. நடந்த வாக்கெடுப்பில் திரேசா கோக் 1,331 வாக்குகளையும் சிவகுமார் 1,542 வாக்குகளையும் பெற்றனர்.

WATCH OUR LATEST NEWS