பெட்டாலிங் ஜெயா, மார்ச்.17-
தன்னை * பாலிங் படையப்பா* என்று கூறிக்கொள்ளும் பாலிங் முன்னாள் எம்.பி.யும், அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், தனது இரண்டாவது மனைவியான மரினா முகமட்டை விவாகரத்து செய்தார்.
லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கி, விடுவிக்கப்பட்டவரான அப்துல் அஸிஸ், பெட்டாலிங் ஷரியா கீழ் நீதிமன்றத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்யும் வகையில் முதலாவது தலாக்கை உச்சரித்தாகத் தெரிவிக்கப்பட்டது.
தாபுங் ஹஜி வாரியத்தின் முன்னாள் தலைவரான அப்துல் அஸிசுக்குச் சொந்தமான பண்டார் சன்வேயில் உள்ள ஒரு கட்டடம் உட்பட ஒரு கோடியே 60 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அப்துல் அஸிஸ் சார்பில் ஒரு வழக்கறிஞராக மரினா முகமட் ஆஜரானார். எனினும் அந்த லஞ்ச ஊழல் வழக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் அப்துல் அஸிஸ் தனது வழக்கறிஞருடன் வந்த போது, மரினா முகமட் கண்ணீருடன் காணப்பட்டார்.