ஜசெக தேர்தல் முடிவு – அந்தோாணி லோக் கையே மேலோங்கியது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.18-

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜசெக தேர்தல் முடிவின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கையே மேலோங்கியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் அவரின் புதல்வரும் முன்னாள் தலைவருமான லிம் குவான் எங் ஆதரவாளர்கள் பெருவாரியாக தோல்விக் கண்டுள்ளனர்.

சுருங்கச் சொன்னால், இந்த தேர்தலில் லிம் குவான் எங்கின் தலை தப்பியதே பெரிய விஷயம் என்று அவர்கள் கூறுகின்றனர். காரணம், 30 பேர் கொண்ட மத்திய நிர்வாகக் குழுவில் லிம் குவான் எங், 1,719 வாக்குகளைப் பெற்று, 26 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

லிம் கிட் சியாங்கின் செல்வாக்கு, லிம் குவான் எங்கின் நீண்ட கால அரசியல் பயணம், எதுவுமே இந்த தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. இவ்விருவருக்கும் மிக நெருக்கமான ஆதரவாளர்களாக இருந்த பழையவர்கள் முழுமையாக ஓரங்கப்பட்டுள்ளனர். படுதோல்வி அடைந்துள்ளனர்.

ஜசெக.வில் தனது தலைமையில் இளையோர் அணியைக் கொண்டு வருவதற்கு அந்தோணி லோக் முன்னெடுத்த அரசியல் வியூகம், இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் கூறுகிறார்.

லிம் குவான் 26 இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினாலும் அவரின் சகோதரியும், லிம் கிட் சியாங்கின் புதல்வியுமான துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங், 1,573 வாக்குகள் பெற்று 31 இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

லிம் ஹுய் யிங், தோல்விக் கண்டு இருப்பது, ஜசெக.வில் லிம் கிட் சியாங் மற்றும் லிம் குவான் எங் ஆதிக்கம் தகர்த்தப்பட்டுள்ளது என்பதை நிரூப்பிப்பதாக உள்ளது.

அதே வேளையில் அந்தோணி லோக்கின் ஆசிப் பெற்று, தேர்தல் களத்தில் களம் கண்ட பெருவாரியான வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்கவர், அந்தோணி லோக்கின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிவரான நீலாய் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினரமான அருண்குமார் ஜம்புலிங்கத்தை சொல்லலாம். அருண்குமார், லிம் குவாங் எங்கை விட 28 வாக்குகள், கூடுதலாகப் பெற்று 24 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எந்தவொரு விவகாரத்தை பேசுவதிலும், கையாளுவதிலும் மிகுந்த நிதானப் போக்கு கொண்டவர் என்று அரசியல் வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் அந்தோணி லோக், ஜசெக.வை, புதிய தடத்தை நோக்கி முன்னெடுப்பார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS