நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா அனைவருக்கும் நன்மை பயக்கும் : டத்தோஸ்ரீ சுந்தராஜு கூறுகிறார்

ஜார்ஜ்டவுன், மார்ச்.18-

நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தை நிறுவுவதில் மத்திய அரசாங்கத்தின் முயற்சியை தாம் வரவேற்கும் அதே வேளையில் அந்த உத்தேச சட்ட மசோதாவைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாக பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்துள்ளார்.

விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான நகர்ப்புற புதுப்பித்தல் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில், குறிப்பாக 40 ஆண்டுகளுக்கும் மேலான பழைய குடியிருப்புப் பகுதிகளைப் புதுப்பிப்பதிலும், சேதமடைந்த கட்டமைப்பு மற்றும் அது தொடர்பாக பல்வேறு சவால்களை எதிர்கொள்வதிலும் இந்தச் சட்டம் ஒரு முக்கியமானப் படியாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு வர்ணித்தார்.

வீடமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் பினாங்கு மாநில அரசு நகர்ப்புற புதுப்பித்தல் அமலாக்க வழிகாட்டுதல்களை உருவாக்கியதன் மூலம் தொடக்கத்திலேயே இதற்கான பெரும் முயற்சியை எடுத்து இருப்பதை டத்தோஸ்ரீ சுந்தராஜு சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி பினாங்கு மாநில திட்டமிடல் நடவடிக்கைக் குழு வாயிலாக இந்த நகர்ப்புற புதுப்பித்தல் அமலாக்க வழிகாட்டுதல்களை அங்கீகரித்துள்ளது.

உண்மையிலேயே இந்த வழிகாட்டுதல்கள், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி கூடிய 81வது ஊராட்சி மன்றங்களுக்கான தேசிய மன்றக் கூட்டத்தின் மூலம் நகர்ப்புற புதுப்பித்தல் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டதன் வாயிலாக மத்திய அரசாங்கத்தின் அபரிமித ஆதரவை பெற்றது என்று டத்தோஸ்ரீ சுந்தரராஜு குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின்படி, பினாங்கில் மொத்தம் ஆறு நகர்ப்புற புதுப்பித்தல் முன்னோடித் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது ஏற்கனவே உள்ள 6,837 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகும். இவற்றில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட நகர்ப்புற புதுப்பித்தல் திட்டங்களில் மாஹ்சூரி திட்டமும் ஒன்றாகும்.

இது, பினாங்கில் தற்போதுள்ள பழைய அடுக்குமாடி வீடமைப்புகளை முடிவுக்குக் கொண்டு வரும் முதல் திட்டமாகும்.

நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தை சுமூகமாக அமல்படுத்தவும், மக்களுக்கு பெரும் நன்மைகளை கொண்டு வரவும் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், முதலாவது கட்டக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

மாஹ்சூரி நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம், பழைய மலிவு வீடுகளில் வசிக்கின்ற 300 குடும்பங்களுக்கு நல்ல விசாலாமான மற்றும் வசதியான வீடுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகம் மிகவும் வசதியான மற்றும் நவீன வீடுகள் மூலம் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளையும் திறந்து விட்டுள்ளன என்பது பினாங்கில் நிரூபிக்கப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS