19 வயது இளைஞருக்கு 6 நாள் தடுப்புக் காவல்

சுங்கை பட்டாணி, மார்ச்.18-

கெடா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவி ஒருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய இளைஞர் ஒருவர், விசாரணைக்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.

நேற்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடுங் காயங்களுக்கு ஆளான அந்த மாணவி தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அந்த மாணவியுடன் கத்தி முனையில் போராடிய 19 வயதுடைய அந்த இளைஞரும் காயமுற்றார். அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட மாஜிஸ்திரேட் எம். கலையரசி, தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அந்த இளைஞரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மாணவியின் முன்னாள் காதலன் என்று நம்பப்படுகிறது. தன்னுடனான காதல் தொடர்பை அந்த மாணவி முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS