ஜோகூர் பாரு, மார்ச்.18-
இம்மாதம் முற்பகுதியில் 31 கிலோ எடை கொண்ட பல வகையான போதைப்பொருளைக் கடத்தியதாக தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒரு பெண் உட்பட நால்வர் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
32 வயது கே. சதீஸ்குமார், 43 வயது B. லெட்சுமணன், 18 வயது S. பவத்ராஜ் மற்றும் 30 வயது C. லாவண்யா என்று அந்த நால்வரும் மாஜிஸ்திரேட் அதிஃபா ஹாஸிமா வாஹாப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்வழக்கு தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் சதீஸ்குமார், லெட்சுமணன், பவத்ராஜ் மற்றும் லாவண்யா ஆகிய நால்வரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு ஜோகூர்பாரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி பின்னிரவு 12.15 மணியளவில் ஜோகூர், தெப்ராவ், ஜாலான் தெப்ராவ் 1 இல் உள்ள ஒரு அப்பார்மெண்ட் வீட்டில் இந்த நால்வரும் போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.