புத்ராஜெயா, மார்ச்.18-
நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை, இரண்டு பிரம்படித் தண்டனை மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இளைஞர், விளையாட்டத்துறை அமைச்சரும், மூவர் எம்.பி.யுமான சையிட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், தனக்கு எதிரான தண்டனையை ரத்து செய்யக் கோரி செய்து கொண்ட மேல்முறையீடு, நாளை புதன்கிழமை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மலேசியாவில் மிகச் சிறு வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பெருமையைப் பதிவு செய்தவரான 33 வயதுடைய சையிட் சாடிக், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி விதித்துள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மேல்முறையீட்டு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனக்கு எதிரான தண்டனையை ரத்து செய்வதில் சையிட் சாடிக், தோல்வி அடைவாரேயானால், அத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வதற்கு கூட்டரசு நீதிமன்றத்தில் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.