ஜோகூர் பாரு, மார்ச்.18-
நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவருந்தியதாகக் கூறி, முஸ்லிம் அல்லாத ஓர் இளைஞரைக் கன்னத்தில் அறைந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். அதே வேளையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த முதியவரின் மகன் மற்றும் சில சாட்சிகளிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் உணவகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து புகார் செய்த சீன ஆடவரின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். அந்த ஆடவர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இன்று ஜோகூர் இஸ்கண்டார் புத்ரி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் டத்தோ குமார் தெரிவித்தார்.
விசாரணை முடிவடைந்ததும், வரும் வெள்ளிக்கிழமை விசாரணை அறிக்கை , உரிய நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.