ஜார்ஜ்டவுன், மார்ச்.18-
பினாங்கு மாநிலத் திட்டங்களின் அமலாக்கங்கள் ஆக்ககரமாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு அத்திட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சுகள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மக்களின் நல்வாழ்வு மேம்படுத்தப்படுவதற்கு குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் ஏழை மக்கள் நீண்ட கால அடிப்படையில் பயன் பெறுவதற்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று பினாங்கு மாநில வருகையின் போது மாநில மேம்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டங்களிலும் பிரதமர் கலந்து கொண்டார். 13 ஆவது மலேசியத் திட்டத்தில் பினாங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.