செப்பாங், மார்ச்.18-
தாங்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்றும், மலேசியாவில் நடைபெறும் நட்புறவு ஆட்டத்தில் பங்கேற்க வந்திருந்திருப்பதாகவும் கூறி, நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த 15 வங்காளதேசப் பிரஜைகள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டனர்.
கிரிக்கெட் ஜெர்சியை அணிந்த நிலையில், குடிநுழைவு அதிகாரிகளின் கண்களை மறைக்க முயற்சி செய்த 15 வங்காளதேசிகளும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கான உடல்வாகு இல்லாததைக் கண்டு, குடிநுழைவு அதிகாரிகள் சந்தேகித்தனர்.
மார்ச் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் கிரிக்கெட் நட்புறவு ஆட்டத்தில் பங்கேற்பதற்காக மலேசியாவிற்கு வருவதற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வழங்கிய உறுதிக் கடிதத்தைச் சோதனையிட்ட போது, அது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த 15 பேரையும் கிரிக்கெட் விளையாட்டிற்காக அழைப்பு விடுத்துள்ள மலேசிய ஏற்பாட்டாளரை குடிநுழைவு அதிகாரிகள் விசாரணை செய்த போது, அவர் ஒரு தொழிற்சாலைக்கு ஆட்களை விநியோகிக்கும் ஏஜெண்டு என்பது தெரியவந்தது.
அந்த 15 வங்காளதேசப் பிரஜைகளும் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் அந்த ஏஜெண்டு குடிநுழைவுத்துறையின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.