குவாந்தான், மார்ச்.19-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிதடி தொடர்பில் மாது ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க தங்க வளையலை லஞ்சமாகக் கேட்டதாக சார்ஜன் அந்தஸ்தைக் கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர், குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயது முகமட் கைரி அஸ்வாடி முகமட் என்ற அந்த போலீஸ் அதிகாரி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தெமர்லோ, தாமான் செஙாலில் உள்ள ஓர் உணவகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பெறப்பட்ட லஞ்சத் தொகைக்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த சார்ஜன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.