புத்ராஜெயா, மார்ச்.19-
லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத பண மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று புதன்கிழமை ஐந்தாவது நாளாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.
காலை 9.57 மணிக்கு இஸ்மாயில் சப்ரி, புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வந்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும், அவர் விசாரணைக்கு ஆஜராகியிருக்க வேண்டும். எனினும் அவர் ஏன் நேற்றைய விசாரணையில் ஆஜராகவில்லை என்று எஸ்பிஆர்எம் தெளிவுபடுத்தவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இஸ்மாயில் சப்ரி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 14 மாதங்கள் நாட்டை வழிநடத்தி வந்தார்.
தாம் பிரதமராக இருந்த போது இஸ்மாயில் சப்ரி முன்னெடுத்த மலேசிய குடும்பம் என்ற பிரச்சாரத்திற்கு செலவிடப்பட்ட பெரும் தொகை, தன்னுடைய கணக்கிற்கு மடைமாற்றம் செய்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையிலும், ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பிலும் அவர் எஸ்பிஆர்எம்மினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.