ஜோகூர் பாரு, மார்ச்.19-
நோன்பு நேரத்தில் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தியதாகக் கூறி, சீன ஆடவர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த முதியவர் ஒருவர், இன்று ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு DNAA முறையில் குற்றச்சாட்டிலிருந்து தற்காலிமாக விடுவிக்கப்பட்டார்.
அப்துல் ராஸால் இஸ்மாயில் என்ற 65 வயதுடைய அந்த முதியவருக்கு எதிரான வழக்கு, புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தின் மேற்பார்வைக்கு கொண்டுச் செல்லப்படுவதற்கு ஏதுவாக அந்த முதியவரின் வழக்கை DNAA கீழ் வகைப்படுத்தி, அவரை தற்காலிமாக விடுவிக்குமாறு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு மாஜிஸ்திரேட் A. ஷார்மினி அனுமதி அளித்தார்.
DNAA என்பது குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரைக் குற்றச்சாட்டிலிருந்து தற்காலிமாக விடுவிப்பதற்கு வகை செய்கிறது. சம்பந்தப்பட்ட நபர், அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு பிராசிகியூஷன் தரப்புக்கு DNAA அதிகாரம் வழங்குகிறது.
முன்னதாக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த முதியவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால், குற்றச்சாட்டின் தன்மையை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த முதியவரின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் ஷார்மினி நிராகரித்தார்.
தன்னை தற்காத்துக் கொள்வதற்கு ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும்படி அந்த முதியவருக்கு மாஜிஸ்திரேட், ஆலோசனை வழங்கினார்.
அதே வேளையில் இவ்வழக்கு விசாரணையின் தன்மையைச் சட்டத்துறை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதால் அந்த முதியவரை தற்காலிமாக விடுவிக்குமாறு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நுர் பஃதிஹா முகமட் நீஸாம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
அந்த முதியவரை மீண்டும் குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாக அவரை தற்காலிமாக விடுவிப்பதாக மாஜிஸ்திரேட் ஷார்மினி அனுமதி அளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் ஜோகூர் பாருவில் ஒரு பேரங்காடியின் உணவகத்தில் உணவருந்திக் கொண்டு இருந்த சீன ஆடவர் ஒருவர், நோன்பு நேரத்தில் உணவருந்திக் கொண்டு இருப்பதாகட் கூறி அவரை கன்னத்தில் அறைந்ததற்காக சம்பந்தப்பட்ட முதியவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த முதிவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.