கடலில் மூழ்கி இந்தியப் பிரஜை மரணம்

லங்காவி, மார்ச்.19-

மலேசியாவிற்கு குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்ட இந்தியப் பிரஜை ஒருவர், லங்காவி தீவில் குளித்துக் கொண்டு இருந்த போது கடலில் மூழ்கி மரணமுற்றார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை, நண்பகல் 12 மணியளவில் லங்காவியில் தாசெக் டாயாங் கடற்பகுதியில் நிகழ்ந்தது.

வட நாட்டவர் என்று நம்பப்படும் 54 வயதுடைய அக்னிஹோத்ரி விவேக் அஷோக் என்பவரே இந்த சம்பவத்தில் மாண்டவர் என்று குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாரிமான் அஷாரி தெரிவித்தார்.

தாசேக் டாயாங் கடலோரப் பகுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் உல்லாசமாக குளித்துகி கொண்டு இருந்த போது அந்த இந்தியப் பிரஜை திடீரென்று காணாதது குறித்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கடற்பகுதியில் இருந்தவர்களுடன் தேடும் முயற்சியில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்கள், அந்நபரை காணாதது குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததாக ஷாரிமான் அஷாரி குறிப்பிட்டார்.

தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியுடன் அந்த இந்தியப் பிரஜையைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்ட நிலையில் அவரின் உடல் பிற்பகல் 2.22 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது. சவப்பரிசோதனைக்காக அந்நபரின் உடல் லங்காவி மருத்தவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

கடற்கரையில் குளிப்பதற்கான பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே அந்த இந்தியப் பிரஜையும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் கடலில் இறங்கிவிட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷாரிமான் அஷாரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS