பெட்டாலிங் ஜெயா, மார்ச்.19-
நோன்புயிருக்கவில்லை என்று கூறி, உணவருந்திக் கொண்டு இருந்த முஸ்லிம் அல்லாத ஆடவர் ஒருவர் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தகையச் செயல்கள், தேசிய ஒற்றுமையுணர்வுக்கும், நல்லிணக்கத்திற்கும் முரணானவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புனித நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் தங்களின் ஆழ்மனதின் வலிமையையும், பொறுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் தேசிய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய விஷயங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இத்தகைய மன வலிமையை வளர்த்துக் கொள்ளாமல் இஸ்லாத்தின் மாண்பைப் பற்றி பேசுவதில் அர்த்தம் கிடையாது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒருவரை ஒருவர் மதிக்கும் மாண்பும், பரஸ்பர மரியாதையை வளர்த்துக் கொள்ளும் பண்பையும் ஒவ்வொருவரும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இத்தகைய பண்பை வளர்த்துக் கொண்டால் மத, இன மற்றும் தேசிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்று பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தினார்.
ஜோகூர் பாருவில் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த ஒரு சீன இளைஞரை, நோன்பிருக்கவில்லை என்று அவரின் கன்னத்தில் அறைந்த ஒரு முதியவரின் செயல் தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.