பெட்டாலிங் ஜெயா, மார்ச்.19-
ஜசெக.வின் லிம் குவான் எங் செல்வாக்கு இழந்ததற்கு அரசுப் பதவி இல்லாததே முக்கியக் காரணமாகும் என்று பினாங்கு முன்னாள் துணை முதல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் P. இராசாமி தெரிவித்துள்ளார்.
பினாங்கு முதலமைச்சர் பதவியை லிம் குவான் எங் துறந்தது, அவரின் செல்வாக்கு குறைய வழிவகுத்தது என்ற ஜசெக.வின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசாங்கத்தில் நிதி அமைச்சர் பதவியை ஏற்பதற்காக பினாங்கு முதலமைச்சர் பதவியை லிம் குவான் எங் துறந்தார்.
எனினும் 22 மாதங்களில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்ததும் நிதி அமைச்சர் பதவியை லிம் குவான் எங் இழந்தது மூலம் கட்சியில் அவரின் செல்வாக்கு சரியத் தொடங்கியதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
மாநில முதலமைச்சர் பதவியைத் துறந்தது, நிதி அமைச்சர் பதவி பறிபோனது ஆகியவை இரண்டுமே லிம் குவான் எங் தனது அரசியல் செல்வாக்கை இழக்கக் காரணமாக அமைந்தது.
பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை அவர் தற்காத்துக் கொண்டிருந்தால் பினாங்கில் தனது அரசியல் தளத்தை வலுப்படுத்திக் கொண்டு, மாநிலத் தேர்தலில் அவர் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்று இருக்க முடியும்.
அதே வேளையில் முதலமைச்சர் பதவியை வகிக்கின்றவர் இரண்டு தவணைக் காலம் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதை மட்டுப்படுத்தும் சட்டத்தையும் அவரால் தடுத்து இருக்க முடியும் என்று டாக்டர் இராமசாமி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.