இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் சித்தி

கோலாலம்பூர், மார்ச்.19-

சர்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து போன்றவர்களினால் முஸ்லிம் அல்லாதவர்கள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருவது குறித்து வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான சித்தி ஸாபேடா காசிம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜம்ரி வினோத் போன்ற மனிதர்களால் இழிவுப்படுத்தப்படும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சித்தி மேற்கண்டவாறு கூறினார்.

தைப்பூச விழாவில் காவடி எடுக்கும் இந்துக்கள் மது போதையில் தள்ளாடுவதாகவும், பேய் பிடித்தவர்களைப் போல் ஆடுவதாகவும் இதற்கு முன்பு ஜம்ரி வினோத் கடும் விமர்சனம் செய்து இருப்பதை சித்தி சுட்டிக் காட்டினார்.

ஏரா எப்ஃஎம் மலாய் வானொலியின் அறிவிப்பாளர் ஒருவர், காவடியாட்டத்தைக் கேலி செய்து காணொளி வெளியிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அது குறித்து ஜம்ரி தனது விமர்சனத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

எனினும் மலாய்க்கார முஸ்லிம்கள் அனைவருமே ஜம்ரி வினோத்தைப் போன்ற குண இயல்புகளைக் கொண்டவர்கள் அல்ல என்பதை சித்தி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS