கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வரலாற்றுப்பூர்வ தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அகற்றப்படுகிறதா?

கோலாலம்பூர், மார்ச்.19-

கோலாலம்பூரில் முக்கிய நில அடையாளமாக விளங்கும் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அகற்றப்படும் திட்டம் தொடர்பில் வழக்கறிஞரும் மனித உரிமைப் போராட்டவாதிமான அம்பிகா ஸ்ரீனிவாசனும், Lawyers for Liberty அமைப்பின் தலைவர்களும் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கோலாலம்பூர் மாநகரில் 130 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வீற்றிருக்கும் இடத்தில் வேறு ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலம் நிர்மாணிக்கப்படுவதற்கு வழிவிடும் வகையில் அந்த பழமை வாய்ந்த கோவிலை அகற்றுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, கோலாலம்பூர் நகராண்மைக் கழக தொழிலாளர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த கோவில் வீற்றிருக்கும் இடத்தில் வழிபாட்டுத் தலம் ஒன்றை நிர்மாணிக்கப்படுவதற்கான அனுமதியைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னள் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசன், Lawyers for Liberty அமைப்பின் பொறுப்பாளர்களான என். சுரேந்திரன், ஸைட் மாலிக், சமூக ஆர்வலர் ஹிஷாமூடின் ரைஸ் ஆகியோர் நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கோலாலம்பூரில் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வீற்றிருக்கும் இடத்தில் யாருடைய வழிபாட்டுத் தலம் நிர்மாணிக்கப்படவிருக்கிறது? எதற்காக அந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள், சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான நோக்கம் என்ன முதலிய விஷயங்களை நாளை நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தாம் அம்பலப்படுத்தவிருப்பதாக அம்பிகா தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS