ஜோகூரில் மூன்று மாவட்டங்களில் வெள்ளம்

ஜோகூர் பாரு, மார்ச்.20-

ஜோகூரில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்ததால், மூன்று மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி, பத்து தற்காலிக துயர்துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மேலாண்மை செயற்குழுவின் தலைவர் அஸ்மி ரோஹானி கூறுகையில், பாதிக்கப்பட்ட 257 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேர் தங்கள் வீடுகளில் இருந்து அந்த 10 மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் பாதிக்கப்பட்டவர்கள் 567 பேர், அதைத் தொடர்ந்து கூலாயில் 269 பேரும் பொந்தியானில் 57 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கை சியாம், சுங்கை ஸ்கூடாய் , பாரிட் கம்போங் பாசீர் கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் ஆபத்தான அளவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூரில் உள்ள பத்து மாவட்டங்களிலும் இன்று காலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜோகூரில் பெய்து வரும் திடர் கனமழையைச் சந்தித்திருக்கும் அம்மாநில மக்கள், எப்போதும் விழிப்புடனும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாபீஃஸ் காஃஸி கேட்டுக் கொண்டுள்ளார், குறிப்பாக, MET JOHORஇன் தகவலின்படி, குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS