பெட்டாலிங் ஜெயா, மார்ச்.20-
சிங்கப்பூர் பெண் ஒருவர் முறையான பணி அனுமதி ஆவணம் இல்லாததால் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொழில்துறை நீதிமன்றம் நியாயமற்றது என்று தீர்ப்பளித்து அவருக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தையும் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 320 ரிங்கிட்டை இழப்பீடாகவும் வழங்கியது.
மெலிஸ்சா ஜோயன் பெஃர்னாண்டஸ் என்ற அந்தப் பெண்மணி ஒரு மழலையர் பள்ளி இயக்குநராகப் பணி புரிந்து வந்தார். தனது துணைவரின் பணி அனுமதியின் கீழ் மழலையர் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அவரது முதலாளிக்கு வணிக உரிமம் இல்லாததால் அவர் பணி அனுமதியைப் பெற முடியவில்லை. அவரது பணிநீக்கம் நியாயமான காரணமின்றி செய்யப்பட்டது என்று கோலாலம்பூர் தொழில்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குடிநுழைவு விதிகளின் கீழ் பணி அனுமதி விண்ணப்பத்திற்கான முன்நிபந்தனையான வணிக உரிமம் இல்லாததால் தவறு நிறுவனத்தின் மீது உள்ளது என்று கூறியது.