கோலாலம்பூர், மார்ச்.20-
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தால் இடிக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோயிலை இடமாற்றம் செய்ய புதிய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் இடமாற்றம் வெளிப்படையான, நியாயமான முறையில் செயல்படுத்தப்படும் எனவும் கோயிலுக்குத் தொடர்புடையவர்களுடன் விவாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் டிபிகேஎல் தெரிவித்துள்ளது. இந்து பக்தர்கள் தங்கள் மத நடவடிக்கைகளை வசதியாகவும் இணக்கமாகவும் தொடர முடியும் என்பதை உறுதிச் செய்வதற்காக இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாக டத்தோ பண்டார் டத்தோஶ்ரீ மைமூனா முகமட் ஷாரிப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கோவில் அமைந்திருக்கும் இடத்தில் எந்த இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது, இடமாற்றம் முடியும் வரை வழக்கம் போல் அக்கோயில் செயல்படலாம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இடமாற்ற செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதிச் செய்ய பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை டிபிகேஎல் வரவேற்கிறது. மேலும் நாட்டில் மத பன்முகத்தன்மையின் நல்லிணக்கத்தை அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று டிபிகேஎல் கேட்டுக் கொள்கிறது.
இதற்கு முன்னர், கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட முன்மொழிவு குறித்து டிபிகேஎல் அறிந்திருப்பதாகக் கூறியது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு சிறிய பகுதி தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அந்த தனியார் நிறுவனத்தால் அவர்களின் சொந்த நிலத்தில் முன்மொழியப்பட்டது, அரசாங்கத்தால் அல்ல என்பதையும் டிபிகேஎல் விளக்கியுள்ளது.