ஈப்போ, மார்ச்.20-
பத்து காஜாவிலும் பண்டார் ஶ்ரீ போத்தானியிலும் உள்ள இரண்டு வளாகங்களில் போலி வாகனப் பராமரிப்பு எண்ணெயை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், பேரா மாநில உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நேற்று புதன்கிழமை சோதனை நடத்தியது. மேலும் வர்த்தக முத்திரை உரிமையாளரின் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான 2,074 வாகனப் பராமரிப்பு திரவங்கள் அவ்வளாகத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சின் பேரா மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
சோதனையின் விளைவாக, 748 வாகன இயந்திரப் பராமரிப்பு எண்ணெய், 1,304 கியர் பராமரிப்பு எண்ணெய் , 22 இதர வாகனப் பராமரிப்புத் திரவம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. ஏறத்தாழ 37 ஆயிரத்து 35 ரிங்கிட் 20 சென் மதிப்புள்ள அனைத்து பொருட்களும் தொடர்புடைய ஆவணங்களும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக கமாலுடின் தெரிவித்தார்.