கோலாலம்பூர், மார்ச்.20-
மே 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதை பொருளாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ரபிஃசி ரம்லி உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உட்கட்சி நாடகங்களைத் தவிர்க்க அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
எனக்கு ஆர்வமில்லை, மற்ற விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது என என்னைப் போன்றவர்கள் கூறினால், அது அதிகப்படியான நாடகம் என்றாகிவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நிலைமைச் சாதகமாக இருக்கிறதோ இல்லையோ பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகவும் போட்டியில் களமிறங்கப் போவதாகவும் ரபிஃசி குறிப்பிட்டார்.
இம்முறை கட்சித் தேர்தலில் பிகேஆரின் முக்கிய நோக்கம், அரசாங்கத்தில் கடமைகளைச் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் அதே வேளையில் ஜனநாயக நடைமுறையை எப்படி ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்வது என்பதில் இருக்க வேண்டும் என்று ரபிஃசி கூறினார். அதோடு 2028 ஆம் ஆண்டு வாக்கில் உயரிய வருமானம் ஈட்டும் நாடு என்ற நிலையை அடையும் இலக்கை நோக்கிய கவனம் அவசியம் என்றாரவர்.
ரபிஃசி 2022 ஆம் ஆண்டு டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயிலைத் தோற்கடித்து பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். 2018 ஆம் ஆண்டே அவர் அப்பதவிக்குப் போட்டியிட்டார். எனினும் அப்போது அப்பொறுப்பில் இருந்த டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலியிடம் அவர் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.