தலைநகர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா அருகே தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் அதன் இடமாற்றத்திற்கானச் செலவை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஜாகேல் டிரேடிங் செண்டிரியான் பெர்ஹாட் எனும் தனியார் நிறுவனத்தின் சட்ட, வெளித்தொடர்பு பிரிவின் தலைவர் தொடர்புகளின் தலைவர் ஐமான் டாசுகி கூறுகையில், கோவில் நிர்வாகத்துடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதங்கள் நடந்து வருகின்றன எனவும் கோவிலுக்கு உதவியாக இடமாற்றத்திற்கானச் செலவுகளைச் செலுத்த தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாகேல் டிரேடிங்கிற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் இடையேயான உறவு 2012 ஆம் ஆண்டில் நிறுவனம் நிலத்தை வாங்கியதிலிருந்து சுமூகமாக இருந்தது என்று ஐமான் கூறினார். “இரு தரப்பினருக்கும் சாதகமான சூழ்நிலையை நாங்கள் விரும்புகிறோம், எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை,” என்றும் அவர் மேலும் கூறினார்.
அப்பகுதியில் பள்ளிவாசல் கட்ட கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி அளித்ததால், கோவில் இடிக்கப்படும் அபாயம் இருப்பதாக செய்தி வெளியானது. தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் 130 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கோவில் நிர்வாகம் புதிய இடம் கேட்டதாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது சிபிகேஎல் புதிய இடத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும், இடமாற்றம் முடியும் வரை இடிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளது.
பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் மார்ச் 27-ம் தேதி நடைபெறும். கோவில் இடமாற்றம் முடிந்த பிறகே பள்ளிவாசல் கட்டப்படும். நிலத்தின் அளவு சிறியது என்பதால், கோவிலை இடமாற்றம் செய்யாமல் பள்ளிவாசல் கட்ட முடியாது. இரு தரப்பினரும் சுமூகமான தீர்வு காண வேண்டும் என ஜாகேல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.