கோலாலம்பூர், மார்ச்.20-
பிறந்ததிலிருந்து இருதய நோயுடன் போராடி வரும் ஒன்பது வயது சிறுமி ஹார்ஷீதா சாயின் மருத்துவ சிகிச்சைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கணிசமான நிதியை வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளர் அஹ்மாட் பாஃர்ஹான் பாஃஸி, பத்துகேவ்ஸில் உள்ள ஹார்ஷீதா சாயின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து, அந்த சிறுமியின் உடல் நிலையை விசாரித்ததுடன் பிரதமர் வழங்கிய கணிசமான நிதி உதவியையும் சிறுமியின் தந்தையிடம் ஒப்படைத்தார்.

சுங்கை பூலோ, சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் பயின்று வரும் மாணவி ஹார்ஷீதா சாய், வளர்ச்சி குன்றிய இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, கடுமையாகப் போராடி வருவதாக பாஃர்ஹான் பாஃஸி குறிப்பிட்டார்.
அவரது ஆக்ஸிஜன் அளவு 70 முதல் 75 விழுக்காடு வரை மட்டுமே உள்ளது. இது சாதாரண அளவான 95 முதல் 99 விழுக்காட்டை விட மிகக் குறைவாகும்.

அமெரிக்காவில் போஸ்டன் சிறார் மருத்துவமனையில் ஹார்ஷீதா சாய்க்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவிட வேண்டியுள்ளது என்பது அந்த சிறுமியின் குடும்பத்திற்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது என்று பாஃர்ஹான் பாஃஸி தெரிவித்தார்.
எனவே குடும்பத்தினரின் நிதி திரட்டும் முயற்சிக்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வான் வழங்கிய கணிசமான நன்கொடையை சிறுமியின் குடும்பத்தினரிடம் தாம் ஒப்படைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சிறிய உதவியானது, மக்களும் ஒன்றிணைந்து உதவுவதற்கு அதிக வழிகளை ஏற்படுத்தும் என்று தாம் நம்பும் அதே வேளையில் சிறுமி ஹார்ஷீதா சாய்க்குத் தேவைப்படகூடிய மருத்துவ சிகிச்சையை விரைவில் பெற்று பூரண குணமடைய பிரார்த்திப்பதாக பாஃர்ஹான் பாஃஸி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.