ஜோகூர் பாரு, மார்ச்.20-
போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் லோரியைச் செலுத்தி, சிங்கப்பூர் பிரஜைகளான சிறார் ஒருவருக்கு மரணம் விளைவித்ததுடன் மேலும் இருவருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதாக லோரி ஓட்டுநர் ஒருவர் ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
57 வயது I. முனியாண்டி என்ற அங் ஆ லியாங் , கடந்த மார்ச் 16 ஆம் தேதி இரவு 10.10 மணியளவில் ஜோகூர்பாரு, ஜாலான் பந்தாயில் 7 வயது நோவா சலிகின் முகமட் கைருஸ் என்ற சிறாருக்கு மரணம் விளைவித்ததுடன் 44 வயது கைருஸ் பாஹ்ராவி மற்றும் 38 வயது லீனா யுலியாந்தி ஆகியோருக்குக் கடும் காயங்களை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம், வாகன உரிமத்தை 7 ஆண்டுகள் ரத்து செய்தல் ஆகிய சட்டத்தின் கீழ் முனியாண்டி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து முனியாண்டி விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.