குவாந்தான், மார்ச்.20-
மலேசிய குடிநுழைவுத்துறையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கை குறித்து, முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தகவல் தந்து, உஷார்படுத்தி, குடிநுழைவுத்துறையில் கருப்பு ஆடாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் குடிநுழைவு அதிகாரி ஒருவர் குவாந்தான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
பகாங் மாநிலத்தில் தெமர்லோ, ரவூப் மற்றும் கேமரன்மலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குடிநுழைவுத்துறையினர் சோதனை நடவடிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே தகவல் அளித்து, குடிநுழைவுத்துறையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி வந்ததாக 39 வயது கமாருல் அமிலின் சைனால் அரிபிஃன் என்ற அந்த குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.
தெமர்லோ, தெமர்லோ ஜெயாவை முகவரியாகக் கொண்ட அந்த அதிகாரி, இவ்வாறு குடிநுழைவுத்துறையின் ரகசியங்களை அம்பலப்படுத்துவது மூலம் காய்கறித் தோட்டங்கள், வெட்டுமர தொழிற்சாலைகள், கேளிக்கை மையங்கள் போன்றவற்றிலிருந்து 47 ஆயிரத்து 600 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அந்த அதிகாரிக்கு எதிராக மொத்தம் 22 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.