ஷா ஆலாம், மார்ச்.20-
மலேசியாவில் மலாய்க்கார முஸ்லிம்கள் மட்டுமே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்றும் பிரதமர் பதவி என்பது அவர்களுக்கே உரியது என்றும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், முன்வைத்துள்ள வாதம், மலேசியர்களிடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிரதமர் பதவியை மலாய்க்கார முஸ்லிம்கள் மட்டுமே வகிக்க முடியும் என்று அந்த மதவாத கட்சித் தலைவர் அறிவித்து இருப்பது, மலாய்க்காரர் அல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களையும் பாதிக்கச் செய்து விடும் என்று மசீச. பொதுச் செயலாளர் டத்தோ சோங் சின் வூன் அச்சம் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி துணைத் தலைவரின் இந்த கோரிக்கையானது, மலேசியாவைக் கட்டியெழுப்புவதில் மலாய்க்கார முஸ்லிம்கள் மட்டுமே பாடுபட்டதைப் போலவும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்களிப்பு இல்லை என்பதைப் போலவும் தவறான தோற்றத்தை சித்தரிக்கிறது என்று சோங் சின் வூன் குறிப்பிட்டார்.
பல்வேறு இனத்தவர், மதத்தினர், கலாச்சாரங்கள் என மலேசியாவின் தனித்துவமான பன்முகத் தன்மையை சீர்குலைப்பதற்கு இனம் மற்றும் மத வாதத்துடன் கட்டி அழுது கொண்டு இருக்கும் பாஸ் கட்சி தனது செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் குறிப்பிட்ட இனத்தவர் அல்லது சமயத்தவர் பிரதமர் பதவி வகிப்பதை மட்டுப்படுத்தும் எந்தவொரு சட்ட விதியும், நாட்டின் அடித்தளமாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை என்பதை பாஸ் கட்சிக்கு சோங் சின் வூன் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், பல்லின சமூகத்தினரையும், அவர்களில் ஒவ்வோர் இனத்தவரின் பங்களிப்பையும் அங்கீரிக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்று சோங் சின் வூன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் பதவிக் காலம், இரண்டு தவணை மட்டுமே என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னதாக மலேசியாவில் மலாய்க்கார முஸ்லிம்கள் மட்டுமே பிரதமர் பதவியை வகிக்க முடியும், அந்தப் பதவி அவர்களுக்கே உரியது என்று அரசிலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் மசீச பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.