லோரோங் பண்டார் ஹீலிர், மார்ச்.21-
மலாக்கா, லோரோங் பண்டார் ஹீலிரில் இரண்டு மாடி தரை வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் ஒருவர் மாண்டதுடன் இதர ஐவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.58 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்ப இடத்திற்கு விரைந்த மலாக்கா தெங்கா மற்றும் பாடாங் தெமு ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் இருக்க, தீயை முழு வீச்சில் கட்டுப்படுத்தினர்.
இத்தீவிபத்தில் தரை வீடு 70 விழுக்காடு சேதமுற்றது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேல் மாடியில் சிக்கிக் கொண்டனர். ஐவர் மீட்கப்பட்ட வேளையில் ஒருவர் இறந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று மலாக்கா தீயணைப்பு மீட்புப்படை முதிர் நிலை அதிகாரி சுஹாய்மி ஆதான் தெரிவித்தார்.
காயமுற்ற ஐவரில், நால்வர் 50 க்கும் 76 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் ஆவர். எஞ்சிய நபர் 38 வயதுடைய ஒரு பெண் என்று சுஹாய்மி ஆதான் விளக்கினார்.
காயமுற்ற ஐவரும் மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.