பிரதமர் பதவிக்கான தவணைக் காலத்தைக் கட்டுப்படுத்துவதா? ஏற்றுக் கொள்ள முடியாது

புத்ராஜெயா, மார்ச்.21-

மலேசிய பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டு காலமாகக் கட்டுப்படுத்துவதற்கு ஜசெக முன் வைத்துள்ள பரிந்துரையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கும், அவர் எத்தனை ஆண்டு காலம் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்கும் தவணைக் காலம் ஓர் அளவுக்கோலாக இருக்கக்கூடாது. மாறாக, பிரதமர் பதவியை வகிக்கின்றவரின் ஆற்றல் மற்றும் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர் எத்தனை ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட வேண்டும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

ஒருவர் பத்து ஆண்டு காலம்தான் பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என்று கால வரம்பை நிர்ணயம் செய்வது மூலம் நாடு எதிர்நோக்கக்கூடிய அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடாது.

ஒருவர் நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் தனது கடமையைத் திறம்பட செய்து வரும் பட்சத்தில், 10 ஆண்டு தவணைக்காலம் என்று அவரின் நேர்மை, திறன், தூய்மை என்ற அவரின் ஆற்றல்மிகுத் செயல்பாட்டிற்குக் கடிவாளம் போட்டுவிடக்கூடாது என்று கடந்த 1981 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டு காலம் மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்த துன் மகாதீர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS