பெட்டாலிங் ஜெயா, மார்ச்.21-
மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஏர்லைன்ஸின் 4 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு 11.37 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமானத்தை நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான MH2 விமானம், நெதர்லாந்து, Amsterdam Schiphol அனைத்துலக விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக மலேசிய வான் போக்குவரத்து குழுமமான MAG அறிவித்துள்ளது.
246 பயணிகள் மற்றும் 17 பணியாளர்களுடன் லண்டன் புறப்பட்ட அந்த விமானம், உள்ளூர் நேரப்படி காலை 6.19 மணிக்கு Amsterdam Schiphol அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானம் புறப்பட்ட பிறகு கிடைக்கப் பெற்ற தகவலினால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானம் திருப்பி விடப்பட்டது. பயணிகள் அனைவரும் Amsterdam Schiphol அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் இன்று காலையில் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சின் MH 4 விமானம், மாலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MAG தெரிவித்துள்ளது.