சிப்பாங், மார்ச்.21-
கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஜாகேல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இடம் மாற்றம் செய்யும் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் தங்களை சாம்பியன்களாக அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று வழக்கறிஞர்களையும், சமயத்தின் பேரில் ஆதரவு தெரிவித்து வருகின்ற வெளித் தரப்பினரையும் டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலயம் தொடர்பான சர்ச்சையை நல்ல முறையில் தீர்த்துக் கொள்வதற்கு தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் வேளையில் நாட்டின் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரை டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.
இந்து சமய நடவடிக்கைகளில் சம்பந்தம் இல்லாத வழக்கறிஞர்கள் உட்பட சமயத்தின் மீது சவாரி செய்கின்றவர்கள், இந்த ஆலயம் உடைக்கப்படவிருக்கிறது என்று கூறி, பிரச்னையைப் பூதகரமாக்கி அறிக்கை வெளியிட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
“நான் பிரதமராக இருக்கும் பட்சத்தில் எந்தவொரு கோவிலும் இடிக்கப்படுவதையோ அல்லது சமய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கப்படுவதையோ என்னால் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாது” என்று டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் பல ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் கோவில் இடிக்கப்படுவது தொடர்பான கேள்வி எழவே இல்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இன்று சிப்பாங், கேஎல்ஐஏவில் உள்ள மஸ்ஜிட் சுல்தான் சாமாட் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்விவகாரத்தைப் பெரிதப்படுத்த வேண்டியதில்லை என்று பிரதமர் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.