ஷா ஆலாம், மார்ச்.21-
பொறியியல் கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் மலேசியாவின் ரயில் தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கும், Tektra Sdn. Bhd. நிறுவனத்திற்கும் இடையில் கருத்திணக்க ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.
இன்று நடைபெற்ற கையெழுத்து ஒப்பந்தச் சடங்கானது, கல்வித்துறையினருக்கும், தொழில்துறையினருக்கும் இடையிலான வியூகக் கூட்டு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும்.

ஷா ஆலாமில் நடைபெற்ற இந்த கருத்திணக்க ஒப்பந்த சடங்கில் UiTM துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஷாரின் பின் சாஹிப், ஆய்வியல், புத்தாக்கத்திற்கான துணை உதவி வேந்தர் பேராசிரியர் டாக்டர் நோராஸா அப்துல் ரஹ்மான், தொழில்துறை, சமூகம் மற்றும் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் வலையமைப்பின் தலைவர் இணைப் பேராசிரியர் டாக்டர் அஸில் பாஹாரி அலியாஸ், திறன் உற்பத்தி ஆய்வியல் கழகத்தின் இயக்குநர் இணைப் பேராசிரியர் டாக்டர் அமான் முகமட் இஹ்சான் மாமாட் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரயில் தொழில்துறையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதிலும் UITM-முடன் இணைந்து, தாங்கள் ஒத்துழைப்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக டெக்ட்ரா செண்டிரியான் பெர்ஹாட் குழுமத்தின் தலைமை இயக்குநர் கார்த்தினி ஹம்சா இதனைக் கூறினார்.

யூஐடிஎம் -டெக்ட்ரா நிறுவனம் இடையிலான இந்த கருத்திணக்க ஒப்பந்தம், இரயில் பொறியியல் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கு UITM – மின் திறன் உற்பத்தி ஆராய்ச்சி கழகத்தின் SMRI பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர் டாக்டர் ரெங்கா ராவ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது.

எளிதில் அகற்றக்கூடிய பசுமைப் பொருட்களை அடிப்படையாக கொண்ட வலிமை மிகுந்த “Geopolymer Concrete Railway Sleeper” என்ற பரீட்சார்த்த ஆய்வுத் திட்டத்திற்கு டெக்ட்ரா செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தொடக்க மானியமாக 25 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குகிறது என்று அதன் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஆனந்த் ராஜா தெரிவித்தார்.
ஆய்வியலை அடிப்படையாகக் கொண்டு, UITM- மிற்கும், டெக்ட்ரா செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த கருத்திணக்க ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு உரியதாகும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தம் நீடிக்கப்படும் என்று டத்தோ ஆனந்த் ராஜா செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.