கோலாலம்பூர், மார்ச்.21-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நில விவகார சர்ச்சையில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கொண்டுள்ள நிலைப்பாட்டை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரம் ஒரு பள்ளிவாசல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் கூட, ஆலயம் இட மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை இருந்தால் அதனை செய்துதான் ஆக வேண்டும் என்று அம்பிகாவிற்குத் தாம் உணர்த்த விரும்புவதாக டாக்டர் அக்மால் குறிப்பிட்டார்.
இதேபோன்று வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளி வாசல் கட்டுப்பட்டு இருக்குமானால், அந்த நிலம் பள்ளி வாசலுக்குச் சொந்தமானது அல்ல என்பது தெரியவந்தால் அந்த பள்ளிவாசலை வேறு ஒரு இடத்திற்கு மாற்றிதான் ஆக வேண்டும் என்பதை அம்பிகாவிற்கும், அவரின் சகாக்களுக்கும் தாம் உணர்த்த விரும்புவதாக அக்மால் தெரிவித்தார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தின் உரிமையாளர் ஒரு நல்லவர். அதனால், தனக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தை அகற்றுவதற்கு அவர் கடந்த பத்து ஆண்டு காலமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை நேற்று விலைக்கு வாங்கிவிட்டு, ஆலயத்தை இன்று அகற்ற வேண்டும் என்று அவர் கோரவில்லை. ஆனால், பத்து ஆண்டு காலமாக ஒரே விவகாரம் குறித்து நில உரிமையாளர் பேசி வருகிறார். அதே வேளையில் சர்சசையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேலும் ஒரு மாற்று நிலத்தை ஆலய நிர்வாகத்திற்கு வழங்க முன் வந்துள்ளது.
ஆனால், அந்த நிலத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, தங்களுக்குச் சொந்தம் இல்லாத ஒரு நிலத்தை தங்களுக்கே வேண்டும் என்று உரிமைக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம் என்று அம்பிகாவிடம் கேட்க விரும்புவதாக டாக்டர் அக்மால் குறிப்பிட்டுள்ளார்.