ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கடந்த மார்ச் 17 ஆம் தேதியில் இருந்து ‘கவிதா சவிதா’ என்ற குடும்ப நகைச்சுவைத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இரவு 9 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பப்படுகிறது.
உள்நாட்டு திரைப்பட இயக்குனர் தீபன் எம். விக்னேஷ் எழுதி இயக்கியுள்ள 16 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர், தொழிலதிபர் ஒருவரின் ஒரே மாதிரி அல்லாத இரட்டைச் சகோதரர்களை மணந்த பிறகு ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் இரு கல்லூரிப் பகைவர்களைச் சித்தரிக்கிறது. குடும்ப ஒற்றுமை பாதிக்காது நடந்து கொள்ள உறுதி பூண்ட அவர்கள் மத்தியில் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால் தனிக் குடித்தனம் செல்ல இருவரும் கணவர்மார்களைச் சம்மதிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.
குடும்ப வணிகத்தில் ஒரு சிறு பிரச்னை ஏற்படும் போது விஷயங்கள் தலைகீழாக மாறுகிறது. கவிதாவும் சவிதாவும் குடும்பத்துடன் இணைந்து வணிகத்தைக் காப்பாற்றுவார்களா இல்லையா என்பதுதான் இத்தொடரின் சுருக்கக் கதையாகும். இதில் ஜெயஶ்ரீ விஜயன், கோமளா நாயுடு, கிளேண்டன் ராஜேந்திரன், புவேந்திரா, திவியா ரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.