பெத்தாய் காய் வியாபாரியின் பிரச்னை நல்ல முறையில் தீர்க்கப்பட்டது

சிரம்பான், மார்ச்.22-

மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பொது இடத்தில் தனது மோட்டார் சைக்கிளிளேயே பெத்தாய் காய்களை வியாபாரம் செய்து வந்த ஒரு வியாபாரியை அங்கிருந்து விரட்டிய நகராண்மைக்கழக அமலாக்க அதிகாரிகளின் மனிதாபிமானமற்றச் செயலை பலர் கண்டித்துள்ளனர்.

போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகத்தற்கு உட்பட்ட இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தின் போது, தன்னை விரட்ட முயற்சி செய்த அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அந்த வியாபாரி, தனது மோட்டார் சைக்கிளில் அன்றைய விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து பெத்தாய் காய்களையும் சாலையில் தூக்கி எறிந்த காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அமலாக்க அதிகாரிகளின் கண் முன்னேயே தனது பெத்தாய் காய்களைத் தூக்கி எறிந்து, அவை குப்பைகளாகப் போகட்டும் என்று கூறி அந்த வியாபாரி தனது ஆற்றாமையை வெளிப்படுத்திய காட்சி பலரது நெஞ்சை ரணமாக்கியது.

யாருக்கும் எந்தவோர் இடையூறும் விளைவிக்காமல் தனது அன்றாட ஜீவியத்திற்கு வழித் தேடும் ஒரு வியாபாரியின் பெத்தாய் காய் வியாபாரம் கூட அமலாக்க அதிகாரிகளின் கண்களை உறுத்துகிறதா? என்று வலைவாசிகள் பலர் கேள்வி எழுப்பினர்.

சட்டவிரோத குடியேறிகள் பலர், கும்பல் கும்பலாக வியாபாரம் செய்து வரும் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியில்லாத அமலாக்க அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை உள்ளூர்வாசிகளிடம் காட்டுவதா? என்ற பலர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

எனினும் இந்த விவகாரத்தை நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஹாருன் நல்ல முறையில் தீர்வு கண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமட் நோர் சாஆட் என்ற அந்த பெத்தாய் வியாபாரியை நேற்று இரவு சந்தித்த தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் G. ராஜசேகரன், உரிய இழப்பீட்டை வழங்கி இருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS