ஈப்போ, மார்ச்.22-
தனது அரசியல் தலைவிதியை அவ்வப்போது நடைபெறக் கூடிய இடைத் தேர்தல்களின் வாயிலாக சோதித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம், நடைபெறவிருக்கும் பேரா, ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலையும் விட்டு வைக்கவில்லை.
ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் களம் இறங்குவதற்கு அந்த பட்டாளிக் கட்சி, தற்போது தயாராகி வருகிறது. இந்த இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சி போட்டியிடவிருப்பதை அதன் துணைத் தலைவர் S. அருட்செல்வன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிஎஸ்எம் கட்சியின் பேரா மாநிலம் எடுத்துள்ள முடிவிற்கு , நேற்று இரவு நடைபெற்ற பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டம், தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக அருட்செல்வன் குறிப்பிட்டார்.
ஆயர் கூனிங் இடைத் தேர்லுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 8 ஆம் தேதி பிஎஸ்எம் கட்சி தனது வேட்பாளரை அறிவிக்கும் என்று அருட்செல்வன் தெரிவித்தார்.