விபத்து : விரைவு பேருந்து ஓட்டுநர் படுகாயம்

நீலாய், மார்ச்.22-

நெகிரி செம்பிலான், நீலாய் அருகில் எலிட் நெடுஞ்சாலையின் தெற்கு வழித்தடத்தில் 43 ஆவது கிலோ மீட்டரில் விரைவு பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரியின் பின்புறத்தில் மோதியதில் பேருந்து ஓட்டுநர் படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்தது. அந்த ஹீனோ ரக விரைவு பேருந்து, ஒரு மலேசிய மொழிப் பெயர்ப்பாளர் மற்றும் 20 சீனப் பிரஜைகளை ஏற்றிக் கொண்டு, கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

51 வயது ஓட்டுநரால் அந்த பேருந்து ஷா ஆலாமிலிருந்து செனாவாங் வழியாக சிங்கப்பூரை நோக்கி இயக்கப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.

காயமுற்ற ஓட்டுநர், சைபர் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததைத் தொடர்ந்து சிரம்பான் துவான்கு ஜாபார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS