குவாந்தான், மார்ச்.22-
பகாங் மாநில குடிநீர் நிர்வாக வாரியமான PAIP- க்கு சொந்தமான லோரி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி வீடமைப்புப் பகுதிக்குள் நுழைந்ததில் ஓர் இந்தியருக்குச் சொந்தமான வீடு மற்றும் கார் கடுமையாகச் சேதமுற்றது.
இந்த சம்பவம் இன்று மதியம் 12.41 மணியளவில் ரவூப், ஜாலான் லிப்பிஸ், தாமான் கெனாஙாவில் நிகழ்ந்தது. இதில் லோரி ஓட்டுநரும், உதவியாளரும் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்கள் யாரும் காயம் அடையவில்லை.
தகவல் கிடைத்து ரவூப் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தை சேர்ந்த ஆறு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் நீர்வாரிய லோரிக்குள் சிக்கிய அதன் ஓட்டுநரையும், உதவியாளரையும் பொது மக்கள் மீட்டனர் என்று அவ்விலாகாவின் பகாங் மாநில பொது உறவு அதிகாரி சுல்பாஃட்லி ஸாகாரியா தெரிவித்தார்.
காயமுற்ற லோரி ஓட்டுநரும், உதவியாளரும் ரவூப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.